இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.இ.அஹமட் அலி அல் முஅல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும் ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் தலைமையிலான குழுவினரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்ததுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.