முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ம் திகதி முன்றரையடி உயர புத்தபகவான் உருவச்சிலை ஒன்று பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால் பிரதிட்டை செய்யப்பட்ட விடயம், பொதுஜன பெரமுன ஆட்சி குறித்து தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டிருந்த அச்ச உணர்வை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இரண்டு தரப்பினரதும் வழிபாட்டு நடவடிக்கைகளை தவிர, எந்தவித கட்டுமானப் பணிகளும் முன்னெடுப்பதற்கான தடையுத்தரவை நீதிமன்று வழங்கியுள்ள நிலையிலேயே, அவ்வுத்தரவை அவமதிக்கும் வகையிலும், தமிழ்மக்களை அச்சம் கொள்ள வைக்கும் வகையிலுமே மேற்படி நடவடிக்கை சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வட மாகாண சபை இயங்காமலும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவர் வடமாகாணத்திற்கு நியமிக்கப்படுவது இழுபறிப்பட்டுச் செல்லும் ஒரு நிலைமையிலுமே தமிழர் பிரதேசம் என்பது ஒரு புறம்போக்கு நிலம் என்பது போலவும், அங்கு சிறிலங்கா அரசின் சட்ட திட்டங்களை மதிக்கத் தேவையில்லை என்பது போலவுமே நீராவியடி நிகழ்வு நடந்தேறியுள்ளது.
மேற்படி புத்த பகவான் உருவச்சிலை விவகாரத்தில் நீதித்துறையினதும் சட்ட அமுலாக்கத்துறையினதும் பக்கச்சார்பற்ற நடவடிக்கைபற்றி மட்டுமல்லாது புதிய ஜனாதிபதியின் அணுகுமுறை பற்றியும் அறிந்துகொள்ள தமிழ்மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பெரும்பான்மை மக்கள் சந்தேகப்படும் வகையில் செயற்படுவதை சிறுபான்மை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் புதிய ஜனாதிபதி, சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற, சந்தேகப்படுகின்ற நடவடிக்கைகளில் பெரும்பான்மை இனம் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளையும் விரைவாக முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதையும், பரஸ்பரம் நம்பிக்கை, பாதுகாப்பான உணர்வு என்பவற்றின் அடிப்படையிலேயே பொருளாதார வளர்ச்சியினையும், அபிவிருத்தியினையும் வடக்கு கிழக்கில் புதிய ஜனாதிபதியினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.
க.சிவநேசன்
பொருளாளர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
முன்னாள் அமைச்சர் – வடக்கு மாகாண சபை