மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் காடு சார்ந்த நிலப் பிரதேசத்தைக் கொண்ட கிராமத்தில் சுமார் 100இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்துவதாகக் கூறி பல மாதங்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் மண் அகழ்விற்கான அனுமதி அனுராதபுரத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அனுமதியை வைத்து மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் விசனமடைந்த குறித்த பகுதி பெண்கள் ஒன்று திரண்டு இன்று காலை மண் அகழும் இடத்திற்குச் சென்று அகழ்வை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் ஜே.சீ.பீ உள்ளிட்ட வாகனம் பணியாட்கள் குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு மண் அகழ்விற்கான உரிமையைக் கோரியும் தன்னுடைய இடம் என்றும் உரத்த தொனியில் சத்தம் போட்டு வந்த தென் பகுதியை சேர்ந்த நபர் இவ் இடத்திற்குள் யாரும் வரக்கூடாது என தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அந்த நபருக்கும் இடையில் பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார். எனினும் மண் அகழ்வை குறித்த பகுதியில் மேற்கொள்ள வேண்டாம் என்பதே எமது கோரிக்கை என தெரிவித்த மக்கள் அந்நபர் போராட்டத்தில் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முற்படுவதாக விசனம் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு பங்குத்தந்தை அருட் தந்தை பெனோ அலேக்சான்டர் சில்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் ஆகியோர் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு அவ்விடத்தில் இருந்தவர்கள் அகன்று சென்றிருந்தனர்.