இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணிகளுக்கு, 20 ஆயிரம் பேர் தேவைப்படுகின்ற போதிலும் 13 ஆயிரம் பேர் மாத்திரமே, தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களத்தில் திறன் மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைப்பாடு காணப்பட்டாலும் தற்போது ரயில்வே திணைக்களத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் நெருக்கடிநிலைத் தோன்றியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.அதனால் சில ஊழியர்கள் மாதாந்தம் 350 -450 மணித்தியாலங்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுவதோடு, சேவை தினங்களுக்கு மாறாக மறுதினத்திலும் 37 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலைமை இருப்பதால், சிலர் மாரடைப்புக்கு ஆளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.