திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேரும், 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்தங்கள் குறித்து இன்று கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 282 நபர்கள் உறவினர்களின் வீட்டில் தங்கி இருப்பதாகவும் வெருகல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சோலை வெட்டுவான், காரவெட்டுவான், மயிலப்பனைச்சேனை ஆகிய வீதிகள் நீர் மூழ்கியுள்ளதாகவும் அதற்குரிய படகு சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் மேலும் தெரிவித்தார்.

அனர்த்தங்களினால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ குழுவினரை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.