இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தின் இணைப்பு அதிகாரிக்கும் விசாரணை அதிகாரிக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலய இணைப்பதிகாரி ரோஹித்த பிரியதர்ஸன தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதம் பதிவு தபால் மூலமாக கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில் பக்கச்சார்பான முறையில் செயல்பட்டதாக தெரிவித்து அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் மேற்கொண்ட விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான காரியாலயத்திற்கு தகவல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கிடைக்கப்பெற்ற ஆலோசனைக்கு அமைவாக வவுனியா காவல்துறைக்கு எழுத்து மூலமான முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தின் இணைப்பு அதிகாரி ரோஹித்த பிரியதர்ஸன தெரிவித்துள்ளார்.