மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக இதுவரை 5653 ஏக்கர் பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்ள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கையினை பொருத்தவரையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 12 கமநல சேவைகள் நிலையங்களில் உள்ள சகல குளங்களின் வான்களும் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் வெள்ளப் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 5653 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதோடு மேலதிக விபரம் ஒரு வாரங்களில் சமர்ப்பிக்க முடியும். அயல் மாவட்டமான அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து நாச்சியார் தீவு என்கின்ற குளத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீர் வந்து கொண்டிருக்கின்றது.

மேலும் நுவர, மார்க்கந்துவ ஆகிய குளங்களில் இருந்தும் வான் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. தற்போது பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, பயர்களும் அழிவடைந்துள்ளன.

எனினும், வளர்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதினால் விவசாயிகளின் முயற்சி பயனளிக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.