இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்து, கிறிஸ்தவர், ஜைனர், சீக்கியர், புத்த மதத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சில கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், இச்சட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்றும் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து வாழும் தமிழர்களுக்கு எதிரானது என்றும் அவையில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கடந்த 35 ஆண்டுகளுக்கு அகதிகளாக வாழ்வதாகவும் அவர்களுக்கும் இந்திய குடியுரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.