மின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் சிரேஸ்ட தலைவர்கள் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது எதிர்காலத்தில் மின் சக்தி துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் நிலவும் சாத்தியகூறுகள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் மின் சக்தி துறை தொடர்பில் பல்வேறு வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் அதில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்டவை என இந்த கலந்துரையாடலில் தெரியவந்தது.

எனவே குறித்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் போது உரிய சாத்தியகூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டுக்கு பொருத்தமான வகையில் செயற்பட வேண்டியதன் முக்கியதுவத்தை இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துரைத்தாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது