நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தவுடன் சபாநாயகர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை இது குறித்து தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கல் ஆணைகுழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல் நீதி அமைச்சு, உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சு உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் அறிவூட்ட நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிடும் பணத்தின் அளவை குறைத்தல் மற்றும் அது தொடர்பான புதிய சட்டவிதிகளை தயாரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டதிட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது காலத்தின் தேவை என்பதால் அது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களையும் தெளிவுபடுத்த இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.