தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதபடுத்தியதாகவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது.இதுவொரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை அச்சுறுத்தி விரட்டியடித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார  கூறுகையில்,

இந்திய மீனவர்களுக்கு கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை என கூறினார்.

இலங்கை மீனவர்கள் தம்மை பாதுகாக்குமாறு கோரியே அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் அதற்கமைய நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை பாதுகாப்பது கடற்படையின் கடமை எனவும் அவர் கூறினார்.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைவதாகவும் ஆனால் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறிய செயற்பட்டால் இலங்கை கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதனை தமிழக அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் தமிழக மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாட்டால் இலங்கைக்குள் கேரள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலகுவாக கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் ஆகவே இத்தகைய செயற்பாட்டை தடுக்க கடற்படையினர் தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு வலைகளை உலர்த்துவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் மீனவர் பிரச்சினையை தமிழக அரசியல்வாதிகள் அரசியல் கருபொருளாக மாற்றியுள்ளமை வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர் தமது நாட்டை மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேக்க வேண்டாம் என அறியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.