வௌ்ளை வேன்” சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து “வௌ்ளை வேன்” சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த இருவரும் வௌ்ளை வேன்களில் நபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தது.

என்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அத்துல சஞ்சீவ மதநாயக்க என்ற சந்தேகநபர்கள் இருவரும் குறித்த ஊடக சந்திப்பில் கொலை, காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.