சட்டவாக்கத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கும் நாடு என்ற வகையில் இலங்கையின் நற்பெயர் அவதானமிக்க நிலைமையில் காணப்படுவதாக சுவிஸர்லாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சாட்சிகளை மறைத்த குற்றத்திற்காக சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவரை சிறைவைத்தமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கவலையடைவதாகவும் குறித்த அதிகாரி சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அவரின் தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படும் வண்ணம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு இலங்கையின் சட்டத்துறையினரிடம் கேட்டுக்கொள்வதாகவும் அந்த திணைக்களம் கேட்டுள்ளது.

தனது ஊழியர் தொடர்பில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்று சுவிஸ்ஸலாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களமும், இலங்கைக்கான சுவிஸ் தூதரகமும் இணைந்து செயற்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுப்பது குறித்து சுவிஸ் தூதரகம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விடயங்களை எடுத்து கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது சேவையாளரை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுவிஸ்ஸலாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களமும், இலங்கைக்கான சுவிஸ் தூதரகமும் இணைந்து முன்னெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையாக சுகயீனமடைந்துள்ள தமது ஊழியரை தொடர்ந்து மூன்று நாட்களாக 30 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் விசாரணைக்கு உட்படுத்தியதை விமர்சித்துள்ள சுவிஸ்ஸலாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களம் விசாரணைகள் நிறைவடைய முன்னரே இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளமையையும் விமர்சித்துள்ளது.