தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்த குடும்பஸ்தருக்கு, 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இன்று (19) தீர்ப்பளித்தது.2012ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதியன்று, கிளிநொச்சி – திருநகரில், யோகலிங்கம் பிரேமினி என்ற 5 பிள்ளைகளின் தாய், அவரது கணவனால் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் கணவரான கந்தையா யோகலிங்கம் என்பவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த நபருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக 5 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்