முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்கு  உட்பட்ட, துணுக்காய்-  ஐய்யங்கன்குளம் வைத்தியசாலையில், நாளைமுதல் வைத்தியர் கடமையில் இருப்பார் என்று, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்துள்ளார்.

ஐய்யங்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும், அவர் கடந்த காலங்களில் அங்கு கடமையாற்றாது, பிரிதொரு வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார் .

இந்த நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, புதிதாக பொறுப்பேற்ற முல்லைத்தீவு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன்  மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து,  நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வைத்தியர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலைக்கு உரிய நோயாளர் காவு வண்டி,  வைத்தியசாலையிலேயே தரித்து நிறுத்தப்படும் என்றும் எனவே, அவசர தேவை கருதி, நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலைக்கு செல்லமுடியும் எனவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.