அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழை தற்போது அதிகமாக பெய்து வருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலநிலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்து வருகின்ற நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் மாலை வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதுடன் சில பகுதிகளில் தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கி வருகின்றன.

அன்னமலை நாவிதன்வெளி பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தின் அருகில் உள்ள பிரதான வாய்க்கால் (3ம் வாய்க்கால்) வெள்ளப் பெருக்கினால் பிரதான பாதை தடைப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு பெய்த கனத்த மழையினூடாக பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக இவ்வாறு பிரதான் பாதை உடைப்பெடுத்துள்ளது.

அத்தோடு நாவிதன்வெளி 2, அன்னமலை 2 கிராமசேவகர் பிரிவுக்குட்ட மக்களின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் எல்லைக் கிராமங்களான 15ம் கிராமம் வேப்பையடிக்கும் தம்பலவத்தைக்குமிடையில் வீதியில் காணப்படும் பள்ளமான பாலப் பகுதியில் ஓரிரவு மழைக்கே அதிகளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் பொதுமக்களின் போக்குவரத்து அடிக்கடி தடைப்படுகின்றது.

உயரமான பகுதியில் வீதியும் தாழ்வான பகுதியில் பாலமும் இருப்பதன் காரணமாக மழை காலத்தில் மழை நீரும் வயல்நிலங்களின் வடிச்சல் நீரும் சேர்ந்து பாலத்தை ஊடறுத்து பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்கின்றது.

பெரும்பாலும் மண்டூர் பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் அதே போல மட்டக்களப்பு நோக்கி இவ்வீதியால் பயணிக்கின்ற பயணிகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வேலைக்கு செல்லும் பெருமளவான பெண் உத்தியோகத்தர்கள் பாலத்தின் மேலாக நீர் செல்கின்ற போது பயணிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன் மழைகாலங்களில் அச்சத்தின் மத்தியிலே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் கவலை தெரிவிப்பதோடு, உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து இப்பாலத்தை நீர் பரவாதவாறு திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.