வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் கீழ் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்த தவறிய 15 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளனர்.

இவர்கள் 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சம்பளத்துடன் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதுடன், நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.

இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஆயினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் தொழிலில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவவும் கலந்து கொண்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)