திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பகல் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் வெருகல், கிண்ணியா, கந்தளாய், குச்சவெளி, சேருவில மற்றும் தம்பலகாமம் உட்பட்ட பிரதேசங்கள் அதிக பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்துள்ளது. அதனடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் 113 கும்பங்களைச் சேர்ந்த 361பேரும், கிண்ணியா பிரதேசத்தில் 751குடும்பங்களைச் சேர்ந்த 2910பேரும், கந்தளாய் பிரதேசத்தில் 1 குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், குச்சவெளி பிரதேசத்தில் 591 குடும்பங்களைச் சேர்ந்த 2116 பேரும்,

சேருவில பிரதேசத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 83பேரும், தம்பலகாமம் பிரதேசத்தில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் வெருகல் பிரதேசத்தில் 108 குடும்பங்களைச்சேர்ந்த 347பேர் மாவடிச்சேனை அரசினர் கலவன் பாடசாலை மற்றும் விட்டான் சமுகசேவை நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்

சேருவில பிரதேசத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் காமினி வித்தியாலயம் சேறுவில மற்றும் ஸ்ரீ போதிராஜ விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெருகல் பிரதேசத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 393 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது எனவும் அவற்றுள் கிண்ணியா பிரதேசத்தில் 7 வீடுகள் எனவும், கந்தளாய் பிரதேசத்தில் 1 வீடு எனவும், தம்பலகாமம் பிரதேசத்தில் 1 வீடு எனவும் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் செய்துக்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.