களுபோவில போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், ஆறாவது மாடியில் இருந்து விழுந்து இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை விஜேரத்னபுர மாவத்தையைச் சேர்ந்த முனியாண்டி சத்தியராஜ் என்ற 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர், உடல் காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்னர், வைத்தியசாலைக்கு வந்து 27ஆம் இலக்க வாட்டில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, வைத்தியசாலை ஊழியர் ஒருவர் குறித்த நபரை உடனடியாக வைத்தியசாலைக்குள் கொண்டு வந்த நிலையில் நோயாளரை பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண விசாரணைகளுக்காக சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொ{ஹவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.