சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது.சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர்.

இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகினர். சுனாமியால் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்திக்காக இன்றுகாலை 9.25முதல் 9.27வரையிலான 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளும், ஆத்ம சாந்திக்கான விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.