வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் ஆஜர் படுத்தப்பட்டனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வெள்ளை வேன் ஓட்டுனர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் டிசம்பர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரில் ஒருவர்

வெள்ளை வேன் ஓட்டுனராக கடமையாற்றியதாகவும் மற்றும் ஒருவர் எல்.ரி.ரி.ஈ ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து தங்கத்தினை எடுத்துவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.