ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சட்டம் மற்றும் நீதியை நியாயமானதாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களும் அவ்வாறே அமைந்திருக்கும் என்று வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் பொதுவாக தற்போதைய அரசாங்கம் சேவையாற்றுவதாகவும் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்தார். சட்டவாட்சியை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா மற்றும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் Sarah Hulton இற்கிடையில் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சில் இன்றுகாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் சட்டத் துறையில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் சிறைச்சாலை பிரிவில் மறுசீரமைப்பு தொடர்பாகவும் அமைச்சரினால் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சட்ட திருத்தம் ஆகிய துறைகளுக்கு பிரிட்டன் அரசாங்கத்தின் நிபுணர்களின் அறிவை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது கூறியுள்ளார். அரசாங்கம் முன்னெடுக்கும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் தாம் பாராட்டுவதாகவும் உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.