சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் அணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய நடவடிக்கையை 2 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையுள்ள விண்ணப்பதாரர் தமது விண்ணப்ப படிவத்தை கையளித்தால் எமது அதிகாரிகள் 2 மணித்தியாலத்திற்கு பின்னர் வருமாறு கூறுகின்றனர். இருப்பினும் சில சந்தர்ப்பத்தில் நேரகாலமாவதினால் இந்த புதிய முறை ஊடாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது குறித்து SMS ஊடாக அவருக்கு அறிவிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பதில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் வேறஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (26) தீடீர் விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது அங்கிருந்த பொது மக்கள் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் நடைமுறையில் உள்ள பிரச்சினை காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர்.

இதற்கு அமைவாக ஜனாதிபதி அங்கிருந்த மோட்டார் வானக போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு முறையான அரச சேவையை வழங்கக்கூடிய நடைமுறை ஒன்றை வகுக்குமாறு தெரிவித்தார். எதிர்வரும் மாதத்தில் அதனை நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)