தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தவகையில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி இணையவழி மூலமாகக் கணக்கு புத்தகத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சகல பாடசாலைகளுக்கும் சென்று உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய சகல மாணவர்களின் தரவுகளைப் பெற்று அதற்கமைவாக அட்டவணை தயாரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஐந்தாம் தரப் புலமை பரீட்சையில் தோற்றுவார்கள் இதில் மாதாந்தம் 15ஆயிரம் ரூபாவிற்கு வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்நிலையில், ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களுக்கு 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை இவ்வுதவித் தொகை வழங்கப்படும். குறித்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு மாணவர்களும் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்கும் முறையானது இதுவரைகாலமும் இருந்தது.

இதனால் கால தாமதம், சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. இதனைத் தவிர்க்க தற்போது இணையவழி மூலமாக மாணவர்களின் கணக்கில் நேரடியாக மாற்றக் கூடிய வகையில் இலகு முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சகல அரச பாடசாலைகளுக்கும் இணையவழி மூலமாக உதவித் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.