மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற இளைஞர் குழு மோதலில் ஓட்டோவொன்று தீக்கிரையாக்கப்பட்டதோடுமூவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு தலைமையப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (29) இரவு, இருதயபுரம் பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு, கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர், ஓட்டோவில் சென்றுள்ளனர். இதன்போது அங்கு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர் சூப் குடிக்க வந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து,  மோதல் ஏற்பட்டது.

 இதில் 03 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டோ தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, முற்றாகச் சேதடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டமையால் தகவலறிந்து பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்த போது, மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.

இந்த மோதல், மதுபோதையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.