இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து அலுவலகம் கோரியுள்ளது.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அலுவலர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சில தளம்பல் நிலை ஏற்பட்டிருந்தது.எனினும் ராஜதந்திர உறவினை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சகல இராஜதந்திர நிலையங்களின் அதிகாரிகளது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே இருக்கிறது என்பதை மீள வலியுறுத்துவதாகவும் சுவிட்சர்லாந்து தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளான சுவிஸ் தூதரக அலுவலர் கைது செய்யப்பட்டு கடந்த தினம் பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, சுவிஸ் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.