இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி என்னும் இடத்தில் பயணிக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலர் சாரதியின் முன் பக்க கண்ணாடிக்கு கல்லெறிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பில் இருந்து மஹரகம நோக்கிய பயணத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சாரதியின் முன் பக்க கண்ணாடி மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து முதல் முறையாக மட்டக்களப்பில் இருந்து மஹரகம நோக்கிய பயணத்தினை ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வாகனேரி பகுதியில் பயணிக்கும் போது குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையினரால் மட்டக்களப்பில் இருந்து மஹரகம நோக்கிய பேருந்து பயணம் மேற்கொண்ட நிலையில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக பேருந்தில் சாரதி தெரிவித்தார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.