3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்தது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக, சரண குணவர்த்தன பணிபுரிந்த காலத்தில், 960,000 ரூபா செலவழித்து மூன்று வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்டதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபருக்கு எதிராக குற்றங்கள் எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டதால் இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.