ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 121 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலை காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது சகோதரி சுனெத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் இன்று காலை 8.00 மணியளவில் வருகை தந்து பண்டாரநாயக்கவின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். எனினும் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஜனன தின அனுஷ்டானங்களை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனவே அதற்கு முன்னர் வருகை தந்திருக்கிறீர்களே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

எனது தந்தையின் ஜனன தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் எனக்கு அது தொடர்பில் அறிவிக்கவில்லை. எனவே வழமை போன்று நான் எனது சகோதரியுடன் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினேன். சந்திரிகா என்றால் அனைவரும் அஞ்சுகின்றனர். அது நோயாகும். அந்த நோய்க்கு மருந்து கிடையாது’ என்று கூறினார்.