கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறார் சித்தார்த்தன்

(தி.சோபிதன்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள், அவருடைய நிலைப்பாடுகள், செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,கோத்தபாயவை பொறுத்தவரையில் இன்று அல்ல முன்னரிலிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக இனப்பிரச்சினை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். இவ்வாறு தான் இவர் செயற்படுவார் என்று எதிர்பார்த்து தான் தமிழ் மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை. மிகப் பெரிய அளவில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர்.

இருந்தாலும் இவர் இந்த நாடடுக்;கு ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். இந்த நாட்டின் அபிவிருத்தி பற்றி கதைக்கிறார். ஆகவே நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட்டால் தான் வெளிநாடுகளும் முதலீடு செய்ய முன்வரும். அதனூடாக அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும்.
ஆகையினால் இன்றைக்கு ஜனாதிபதி இப்படி தான் செல்கிறார். இப்படித் தான் இனியும் செயற்படப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தாலும் அது குறித்து நாங்கள் எங்களது நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கமுடியாது. ஆகவே, எமது பிரச்சினைகள் தீரு;க்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்தும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதைத் தான் சொன்னாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அவசியமானது. அதற்காக நாங்கள் எங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு தான் வருகின்றோம்.

குறிப்பாக இந்த விடயத்தில் ஜனாதிபதி வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தாலும் இந்த ஆட்சியில் இன்று பிரதமராக இருக்கின்ற அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா உட்பட பலருக்கும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இன்றைக்கு ஜனாதிபதி எப்படி சொல்லியிருந்தாலும் நாங்கள் எங்களுயை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி பிரச்சினைகளை தீர்ப்பார் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். வவ்வாறு தீர்ப்பார் என்று நம்பவுமில்லை. ஆனாலும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.

அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு பலமான அமைப்பாக உருவாகினால் சம பலத்துடன் நின்று பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா கேட்டிருக்கின்றார். ஆகவே, வடகிழக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்களுடன் பேசத் தான் வேண்டும். பேசாமல் இங்கிருந்து தனியாக எதனையும் செய்ய முடியாது.

இதேவேளை, கடந்த காலங்களிலும் இவரைப் போல கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த சிங்களத் தலைவர்கள் எல்லாம் பின்பு அந்த நிலைப்பாடுகளிலிருந்து விலகி ஒப்பந்தங்களை எழுதிய சரித்திரங்கள் எல்லாம் உள்ளன. உதாரணத்துக்கு கடுமையான நிலைபாட்டை எடுத்த பண்டாரநாயக்க கூட தந்தை செல்வாவுடன் ஒப்பந்தம் செய்தார்.

ஆகவே, இவர் சொல்லி விட்டார் என்பதற்காக அல்லது கடும் போக்கைக் காட்டுகிறார் என்பதற்காக நாங்கள் எங்கள் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிட முடியாது. அதனைத் தீர்ப்பதற்கு எங்களாலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உண்மையில் இந்த நாட்டை சரியான முறையில் முன்னேற்றி அபிவிருத்தி செய்ய வேண்டியது முக்கியம். அதனை ஜனாதிபதி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்றார். (நன்றி : வீரகேசரி 06.01.2020)