செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம், பொதுமக்களின் கருத்துகளைச் செய்தியாக வெளியிட்ட குற்றச்சாட்டில், நீதிமன்றத்தில் ஆஜரான மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான செ.நிலாந்தனைப் பிணையில் விடுவிக்க, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைச் செய்தியாக வெளியிட்டமைக்காக, குறித்த ஊடகவியலாளர் மீது, 26.02.2019 திகதியன்று, மேற்படி பிரதேச செயலாளர் செய்த முறைப்பாட்டுக்கமைய, ஏறாவூர் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

ஆனால், குறித்த வழக்குத் தொடர்பாக 10 மாதங்களாக ஊடகவியலாளருக்கு அழைப்புக் கடிதமோ, அழைப்பாணையோ வழங்கப்பவில்லையென, ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், இம்மாதம் 02ஆம் திகதியன்று இரவு 9 மணியளவில், ஏறாவூர் பொலிஸார், ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டுக்குச் சென்று, அவரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து,  சட்டத்தரணி ஊடாக நேற்று (08) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், ஊடகவியலாளர் ஆஜரானார்.

இதன்போது, நீதிபதி ஜீவராணி கருப்பையா, ஊடகவியலாளரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதோடு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் மார்ச் மாதம் 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.