அம்பாறை நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதி, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

இத்தகவலை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன் லத்தீப் தெரிவித்தார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இவ்விசாரணைக்கு, தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருந்கும் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் அழைக்கப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமை அதிகாரியான அம்பாறை மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர்,

கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரும் மேற்படி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர், கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.