கட்டாய விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்கும் ஊழியர் துன்புறுத்தி மிரட்டப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர். அதாவது குறித்த சம்பவத்தில் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாவிடின் வேறு ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது தொடர்பான விடயங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை எதிர்வரும் மார்ச் 18ம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

அதற்கமைய வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார். அதுவரை சந்தேக நபரான பூஜித் ஜயசுந்தர விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தால் அவரை அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.