அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் ஆலிஸ் ஜி.வெல்ஸ், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை (13) மதியம் இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நாளை மதியம் இலங்கைக்கு வரும் ஆலிஸ், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ போன்ற அரசியல் பிரமுகர்களையும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து, பிராந்தியப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மனிதஉரிமைகள் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு 15ஆம் திகதி டெல்லி செல்லும் ஆலிஸ், அங்கு 18ஆம் திகதிவரை தங்கியிருந்து, அரசியல் பிரதானிகளைச் சந்தித்து, பிராந்திய நலன்கள் சம்பந்தமான உரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விஜயத்தை முடித்துக்கொண்டு, 19ஆம் திகதி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் அவர், 22ஆம் திகதிவரை அங்கிருந்து, அரசியல் பிரதானிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.