அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஒலுவில் தொடங்கி நிந்தவூர் வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாக அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட பைகளை அடுக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு, ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சுனாமி ஏற்படுத்திய அதிர்வினால் புவித் தட்டுக்களில் ஏற்பட்ட இடைவெளிகளின் காரணமாக அலைகளின் வேகம் அதிகரித்துள்ளதாகவும், இந்நிலைமையால் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் அமைந்துள்ளது கடலரிப்பை இன்னும் ஊக்கப்படுத்தியுள்ளதாக கூறினார்.

“அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 4,431 சதுர கிலோ மீட்டர். இதில் கரையோரப் பிரதேசம் 1800 சதுர கிலோ மீட்டர்களாகும். கடற்கரையோரங்களில் இருக்கும் கனிம வளங்கள் தொடரச்சியாக அகழப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதோடு, இங்குள்ள கண்டல் தாவரங்களும் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. ஜனத்தொகை அதிகரிப்பு மற்றும் மானிட நடவடிக்கைகள் இதற்கு பிரதான காரணங்களாகும். இதனால் தான் இங்கு கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது. பிறகு சுனாமிக்குப் பின்னர் இது இன்னும் தீவிரமடைந்தது” என்கிறார் அவர்.

“ஒலுவில் கடற்கரை வலயம் முருகைக் கற்கள் மற்றும் பாறைகளைக் கொண்ட பகுதியல்ல. இது சாய்வானதொரு பிரதேசமாகும். எவ்வாறாயினும், ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டமை காரணமாகவே கடலரிப்பு ஏற்பட்டது என்கிற குற்றச்சாட்டை முழுவதுமாக ஏற்றுகொள்ள முடியாது” என்றும் பேராசிரியர் கலீல் கூறினார்.

“கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் மண் அகழ்வு நடவடிக்கைகளும் அதிகரிக்கின்றன. கடற்கரையை அண்டிய இடங்களில் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படுகின்றமையினால் அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. இவை போன்ற நடவடிக்கைகளால்தான் கடுமையான கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது.

2006 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தோமானால், இந்தப் பிராந்தியத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 25 மீட்டர் நிலப்பகுதி கடலரிப்புக்குள்ளாகி வந்தது. ஆனால், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 60 முதல் 90 மீட்டர் நிலப்பரப்பு ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பினால் பறிபோனது.

வன்மையான மண் கொண்ட நிலம் இல்லாமலானதே இவ்வாறான கடலரிப்புக்கு முக்கிய காரணமாகும். மேலும், உலக காலநிலை மற்றும் கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் கடலரிப்பை தீவிரப்படுத்தும் ஏனைய காரணிகளாக அமைந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

“கடலரிப்புக்கு நிரந்தர தீர்வினை காண வேண்டுமானால், கடற்கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்களை வளர்க்கும் நடவடிக்கையை நாம் ஆரம்பிக்க வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் பனை மரங்கள் மற்றும் மூங்கில் தாவரத்தை வளர்க்கலாம். இவை தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்”.

“பேருவளை, மொரட்டுவ மற்றும் பாணந்துறைப் பிரதேசங்களும் இவ்வாறு கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களில் பெரிய பாராங்கற்களை இட்டதன் மூலம் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளின் நிதியுதவி இதற்காகப் பயன்படுத்தப்பட்டன”.

“ஆனால், மிக நீண்ட காலமாக இந்தப் பகுதிகளில் யுத்தம் இடம்பெற்று வந்தமையினால், அப்போது அபிவிருத்திகள் இடம்பெறாமல் அம்பாறை மாவட்டம் கைவிடப்பட்டிருந்தது. அதன்போது கடலரிப்பை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆரம்ப நிலையில் கடலரிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும், அது தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளது” என்றும் பேராசிரியர் கலீல் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே இந்தப் பிராந்தியத்தில் தீவிர கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் கே. நிஜாமிர். தாம் பெற்றுக் கொண்ட தொழில்நுட்ப ரீதியிலான தரவுகள் இதனை நிரூபிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கடலரித்தல் என்பது கடற்கரையோரங்களில் ஏற்படும் சாதாரணமானதொரு இயற்கை நிகழ்வாகும். ஆனால் இது சுழற்சி முறையில் நடப்பதால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

உதாரணமாக, ஓரிடத்தில் அலைகளால் அரிக்கப்படும் மணல், இன்னோரிடத்தில் படியும். பின்னர் காற்றின் திசையும் கடலின் நீரோட்டமும் மாறும் போது, மணல் படிந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலிருக்கும் மணல் – முன்னர் கடலரிப்பு ஏற்பட்ட இடத்தில் படியும். இதன்போது, கடலரிப்பினால் ஏற்பட்ட பாதிப்பு சீராகி விடும். இது இயற்கையாக மாறி மாறி நடைபெறும்.

ஆனால், இந்த இயற்கை செயல்முறையில் அசாதாரண நிகழ்வுகள் அல்லது குளறுபடிகள் ஏற்படுமாயின், அரித்தலும் படிதலும் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இதுதான் ஒலுவிலிலும், அதன் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒலுவில் துறைமுக நுழைவாயிலில் இரண்டு அலைத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அலைகளால் அரிக்கப்படும் மணல் நகர்த்தப்படும் போது, அதனை துறைமுக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள அலைத் தடுப்புகள் தடுக்கின்றன. இதனால் தான் துறைமுக நுழைவாயில் பகுதியில் அதிக மணல் சேர்கிறது.

ஒவ்வொரு கால ரீதியாகவும் செய்மதி (செயற்கைக் கோள்) படங்களை அவதானிக்கும்போது, ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அதன் வடக்குப் பிரதேசங்களிலுள்ள நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் அரித்தலும், துறைமுகத்தின் தென் பகுதிகளில் மணல் படிதலும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில், இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நில உருமாற்றத்துக்கு, ஒலுவில் துறைமுக நிர்மாணம் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் டென்மார்க் இல் உள்ள ஆல்பொர்க் (Aalborg) பல்கலைக்கழகத்தினால் மூன்றாந்தரப்பு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள கடலரிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த கடலரிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீர்வுகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

அவற்றில் முதலாவது மீன்முள் அமைப்பில் கடற்கரையோரத்தில் ஒரு கடடுமானத்தை மேற்கொள்வதாகும். அதாவது கடற்கரையோரத்துக்கு சமாந்தரமாக ஒரு கட்டுமானத்தினை செய்து, அதிலிருந்து குறுக்காக மேலும் சில கட்டுமானங்களை மேற்கொள்வதாகும். இதன்போது மணலை அலைகள் அரித்து வேறோரிடத்தில் படிய வைக்கும் செயன்முறை தடுக்கப்படும்.

இரண்டாவது செயன்முறை கடலரிப்பினால் அலைகள் எடுத்துச் செல்லும் மணல் எங்கு படிகிறதோ, அந்த மணலை கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிக் கொண்டு வந்து, மீண்டும் அரிக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதாகும்.

மூன்றாவது முறைமை அலைத் தடுப்புகளை உருவாக்குவதாகும். ஒலுவில் பிரதேசத்தில் அலைத் தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவை உரிய பலனைத் தரவில்லை. அலைத் தடுப்புகள் அமைக்கும் போது அவை உரிய அளவிலும் உரிய இடைவெளிகளிலும் இருத்தல் வேண்டும்.

தென் பகுதியில் கிரிந்த மீன்பிடி துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், ஒலுவில் துறைமுக நுழைவாயிலில் அதிக மணல் படிவதைப் போன்று, அங்கும் மணல் படியத் தொடங்கியது. இதற்குத் தீர்வு காணும் நடவடிக்கைக்காக, குறித்த துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு செலவாகிய நிதியைப் போன்று ஐந்து மடங்கு நிதி செலவிடப்பட்டது. இப்போது ஓரளவு தீர்வும் கிடைத்துள்ளது” என்றும் விரிவுரையாளர் நிஜாமிர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் கடலரிப்பு காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் 148 ஏக்கர் தனியார் காணிகள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்ஸார் கூறினார்.

அவற்றில் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் என்றும் 28 ஏக்கர் தென்னை மரங்கள் இருந்த காணிகள் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சுனாமி தாக்கத்தின் பின்னர் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், தமது அவதானிப்பின் படி, ஒலுவில் துறைமுக வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

“நிலத்தினுள் கடல் உட்புகுந்தமை காரணமாக அங்குள்ள நெற்செய்கைக் காணிகளினுடைய மண்ணின் உவர்த்தன்மை மிகவும் அதிகரித்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது”.

“எவ்வாறாயினும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட ஒலுவில் பிரதேசத்துக்கே அரசாங்கத்தினால் அதிகளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் அமையப் பெற்றுள்ளமை காரணமாக, அங்கு பாதிக்கப்பட்டோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் நிலம் இழந்தவர்கள், கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் கிடைத்துள்ளன. ஆனால், நிந்தவூர் பிரதேசம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட போதும் உரிய அளவு அவதானம் பெறவில்லை.

இந்த நிலையில் தான் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேசத்தை கவனத்துக்குட்படுத்தும் நடவடிக்கைகளை கடந்த வருடம் தொடக்கம் ஆரம்பித்துள்ளோம். பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அழைத்து, இங்கு ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் ஆய்வு ஒன்றைச் செய்தோம்.

இதேவேளை, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்.

எவ்வாறாயினும் கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையினை கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்து தருவதாக கூறியுள்ளது. ஆனால், அதற்கான நிதியினைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது கடலரிப்பின் தீவிரத்தைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கையாக மணல் பைகள் கரையோரங்களில் போடப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு திணைக்களம்தான் இதனைச் செய்துள்ளது. கடலரிப்பைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இந்த முறையினையும் பின்பற்றுகின்றனர். இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், மணல் நிரப்புவதற்கான ஒரு தொகைப் பைகளைக் கொள்வனவு செய்வதற்கு தனிப்பட்ட ரீதியில் உதவிகளை வழங்கினார்.

இதேவேளை, நிலையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, கரையோரங்களில் பாராங்கற்களை போடுவதற்கான திட்டம் ஒன்றினைத் தயாரித்து வழங்குமாறும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்டுள்ளோம்” என்றும் பிரதேச செயலாளர் அன்ஸார் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக அங்கு கரையோரங்களில் பாரிய பாறாங்கற்கள் இடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் காரணமாக கடலரிப்பின் தீவிரம் அங்கு கணிசமானளவு குறைந்துள்ளது.

ஆனால், நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகத் தீவிமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி (பிபிசி தமிழ்)