2019-2020 ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகி கடந்த 11 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.குறித்த காலப்பகுதியில் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற சுமார் 150 இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சுலனி வீரரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹெரோயின், ஐஸ், கேரள கஞ்சா, கஞ்சா கலந்த போதை உருண்டைகள் (மதன மோதகம்), சட்டவிரோத சிகரெட், போதை மாத்திரைகளை எடுத்து வந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 110 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 பேருக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றம் முன்னிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் போது போதைப்பொருளை கொண்டு வருவதை தவிர்க்குமாறு கோரியுள்ள போதிலும் அதனை மீறும் வகையில் தொடர்ந்தும் போதைப்பொருளுடன் வரும் யாத்ரீகர்களை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளுடன் வரும் யாத்ரீகர்களுக்கு எவ்வித மன்னிப்பும் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.