வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்துக்கு முன்பாக, பாதுகாப்பற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட பட்டாசு விற்பனை நடவடிக்கை, வவுனியா நகர சபையின் தலையீட்டை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்று (14) பகல், குறித்த பகுதியில் நபர் ஒருவர் பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார்.

இதன்போது, பட்டாசுகளை வாங்குவதற்காக அதிகளவான மாணவர்கள் பாடசாலை முடிவடைந்ததும் அவ்விடத்தில் குழுமியிருந்ததனர்.

இதனை அவதானித்த வவுனியா சிரேஷ்ட சட்டதரணி இ. தயாபரன், பட்டாசு விற்பனை செய்யும் நபரிடம் சென்று, இவ்விடத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வது மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்று தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைத் தவிசாளருக்கும் தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் நகரசபை தவிசாளரின் தலையீட்டை அடுத்து, குறித்த விற்பனை நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.