இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் எல்லையை 90 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எல்லை 80 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்ற போதும் அந்த எல்லையை கடந்து 84 பில்லியன் ரூபாய் வரை எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு மாற்று நடவடிக்கையை பின்பற்றுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அமைச்சரவையின் அனுமதியுடன் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் குறித்த எல்லையை 90 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ள அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு மின்சார சபை அதிகாரிகள் அமைச்சருக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்படவுள்ள மிகுதித் தொகையை மின்சார சபைக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.