வவுனியா செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடிமருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் நேற்று இரவு மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன்போது குறித்த பேரூந்தில் 51 ஜெலக்னேட் வெடிமருந்து குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை மீட்ட இராணுவத்தினர் குறித்த வெடிமருந்து குச்சிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட வெடிமருந்து குச்சிகளும், கைது செய்யப்பட்ட இருவரும் செட்டிகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேரூந்தும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.