எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ரயில்வே நிலையங்களுக்கு அருகிலும் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரயில் – பஸ் கூட்டு சேவை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலும் சுமார் 100 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த வருட இறுதிக்கு முன்னர் புதிதாக 9 ரயில் எஞ்சிகள் கிடைக்க உள்ளன. இவை மலையக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், பழமைவாய்ந்த முறைக்கு அமைவாக, ரயில் ஒன்று தற்போது இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் செப்பனிடப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் கொழும்பில் இருந்து பண்டாரவளை வரையில் இந்த ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென்றும் கூறினார். ரயில் திணைக்களம் ரயில்களின் தேவைக்கு ஏற்றவகையில் திட்டங்களை வகுத்து வருவதாகவும் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாளாந்தம் காலை வேளையில் 48 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)