எதிர்வரும் பொது தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து தாம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அந்த வகையில் அவரது வெற்றிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 17 இலட்சம் வாக்குகள் வழிவகுத்தன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க எமது கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் பலரது கோரிக்கைகளுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.