மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்றுகாலை ஒன்றுகூடிய மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கையெழுத்துப்பெறும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உடன் அரச நியமனத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலைவரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதில் சேகரிக்கப்படும் கையெழுத்துகளையும் தமது கோரிக்கைகளையும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் கே.அனிதன் தெரிவித்தார்.

சமுர்த்திப் பயனாளிகள் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்களை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், எமது வேலையற்ற பட்டதாரிகள் கணக்கிலெடுக்கப்படாமலிருப்பது கவலையளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். முன்னைய அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தின் மீது தாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவதாகவும் இதன்போது பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,300க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் எனவும் பட்டதாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக, சிலர் வேலைவாய்ப்பை பெறும் வயதையும் கடந்து தொழில்வாய்ப்புப் பெறமுடியாத நிலையில் உள்ளனரெனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அரச நியமனங்களை வழங்க வேண்டுமெனவும் இல்லையெனில், பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரமளவில் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவேண்டி ஏற்படுமெனவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.