பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை நிராகரித்துள்ள காரணத்தால் அதனை நீதிபதி ஜனக ஹேரத்திடம் ஒப்படைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த வழக்கு எதிர்வரும் 27ம் திகதி நீதிபதி ஜனக ஹேரத் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.