கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1700 பேருக்கு அதிகமானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சீனாவின் பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை உதயமாகிய சீன புதுவருடத்தையும் மக்கள் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படும் நோயாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.