சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய பீஜிங்கில் இருந்து கென்டன் வரை இந்த விமான சேவை முன்னெடுக்கப்டவுள்ளது. இவ்வாறு வருகைத்தரும் இலங்கை மாணவர்களுக்கு 50 வீத பயண கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேற்குறித்த தகவல்களை தெரிவிக்க முடியும்.

சீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்காத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2000 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 40 பேர் பல்வேறு நாடுகளில் இனம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, ஜப்பான், நேபாளம், தென் கொரியா, அமெரிக்கா, ஹொங்கொங் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அங்கோடையில் அமைந்துள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.