ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி ஒருவரும் இந்நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ள சீன நாட்டு பெண் ஒருவருமே நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து வருகை 47 வயதான இந்திய பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பயணி விமான சேவை ஊழியர் ஒருவரை அழைத்து தான் கடுமையான குளிரை உணர்வதாகவும் அதேபோல் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விமானத்தின் பிரதான விமானிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார். அதன் பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டு குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நிலையில் அவரின் உடலில் 101 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து வலைகுடா நாடு ஒன்றுக்கு பயணித்துள்ளார்.

அதன் பின்னர் அதே விமானத்தில் பயணித்த 37 வயதான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கருவிகளின் ஊடாக இனம் காணப்பட்டுள்ளார்.

அவரின் உடலில் 102 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டதை அடுத்து அவரும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தார்.