இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தொற்றுக்கு உள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.

அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை’ என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.