இலங்கையில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுக்களை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதிகளுக்கு சென்று, கொரோனா வைரஸ் தொடர்பில் சீன பிரஜைகளுக்கு விளக்கமளிக்கவுள்ளதுடன் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடி சிகிச்சை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் பெரும்பாலான சீன பிரஜைகள் பணிபுரிவதுடன், அவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.