அதிக விலையில் முக கவசம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக விலையில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (290 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோது பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சதொச விற்பனை நிலையத்தில் முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் முகக்கவசங்களுக்கான நிர்ணயவிலை நேற்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாயாகும்.

பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாயாகும். அத்துடன், N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விலைகளுக்கு அதிகமாக முகக்கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பதுக்கிவைத்துள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.