சீனாவில் இருந்து இதுவரை 488 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதேபோல் இன்றும் சீனாவில் உள்ள ஒரு தொகுதி மாணவர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவராலயத்தின் மேலதிக உயர்ஸ்தானிகர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வாரத்தினுள் சீனாவில் உள்ள சகல மாணவர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க எதிர்பார்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். சீனாவில் இருந்து நேற்று இரவும் ஒரு தொகுதி மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை கொரன்னா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. கொரனா வைரஸ் இதுவரை 16 நாடுகளுக்கு பரவியுள்ளதால்; அதனை மேலும் பரவ விடாமல் தடுப்பது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு உலகம் பூராகவும் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவது தொடர்பிலும் இன்றைய சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கொரன்னா வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 7,283 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.